2016-ஆம் ஆண்டிற்கான G-20 மாநாட்டினை நடத்தும் பொறுப்பு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் அம்மாநாட்டிற்கு முன்பு முறைப்படி நடத்தப்படும் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் மாநாடு சீனாவின் செங்டு நகரில் 2016 ஜூலை 25 அன்று துவங்கியது. உலகப் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து மீண்டுவருவது மிக மெதுவாக உள்ள நிலையில் மீட்சியை துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகள் இம்மாநாட்டில் அடையாளம் காணப்பட்டன.
மேலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் மாற்றம், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள நிதிசார் பிரச்சினைகள், சுதந்திரமாக வர்த்தகம் மேற்கொள்ள தடையாக உள்ள அம்சங்கள், மிதமிஞ்சிய உருக்கு உற்பத்தியினைக் கட்டுக்குள் வைத்து அதன் விலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.